புதன், 5 அக்டோபர், 2016

அருளின் ஜோதி –கவிதை

பொருளென்றால் பேய்காக்கும் பிணங்க ளெலாம்
பேராசைக் கொண்டேதான் வாய்பி ளக்கும்!
அருளென்றால் என்னவென்று எங்கே என்றே
அகிலத்தின் மாந்தரெலாம் கேள்வி கேட்பர்!


கருவறையில் கண்மூடி கிடந்த போழ்தில்
காசைத்தான் அறிந்தோமா? இல்லை இல்லை!
குறுநகையோ வாயிதழ்கள் நல்கும், ஆயின்
கொடுநெஞ்சம் பிறிதொன்றை உரைத்தே சாடும்!

திருவென்றால் அழகேதான் தெளிந்த நெஞ்சில்
திருஅருட்பா குடிகொண்டால் மிளிரும் வாழ்வு
நறுமலர்தான் மல்லிகையை நினைவில் கொண்டால்
நம்மெதிரே காண்போமே! அண்ணல் தோற்றம்
கருவிழியில் ஒளிர்ந்திடுமே அன்பு வெள்ளம்
காசினியில் அருள்மழைப் பொழிந்த காரோ ?
உருக்கிடும் உள்ளந்தனில் ஒளிரும் ஜோதி
உவந்திருப்பார் அருட்பாவின் அருளின் ஜோதி!

மண்ணுயிர்கள் அனைத்திற்கும் அன்பை நல்க
மா-தமிழில் பாக்களெல்லாம் அருளிப் போந்தார்!
இன்னுயிர்தான் இவ்வுடம்பில் உலாவும் போழ்தில்
இச்சைகளை ஒழித்தாலே பெருகும் அன்பே!
என்றியம்பி இச்சகத்தில் வாழ்ந்து காட்டி
இருள்களையும் ஆதவனாய் ஒளிர்ந்தே நின்றார்!
நன்றில்லா சாதியெனும் பேயைச் சாடி
நயமான கவிதைகளை நமக்கு தந்தாரே!


8 கருத்துகள்:

  1. வள்ளலார் மீண்டும் வர வேண்டும் ...நன்றில்லா சாதியெனும் பேயைச் சாட !

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தாமதத்திற்கு மன்னிக்கவும், இன்றுதான் தங்கள் கருத்தினை பார்த்தேன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...