செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

எல்லைக்கோடு

அன்னை யென்ற சொல்லுக்கு முன்னாலே
அகிலத்தில் தெய்வமும் இல்லை அன்றோ !
பண்பினையே பாசத்தோடு கலந்தே ஊட்டி
பண்பாட்டை பேணுகின்ற பெரும் செயலை
என்றென்றும் செய்தேதான் மகிழ்ந்து வாழ்ந்து
இன்னலுடன்  இடையூறுகள்  வந்த போழ்தும்
அன்பைத்தான் அள்ளியள்ளி வழங்கு வதிலே
அவளென்றும் இட்டதில்லை எல்லைக் கோடே!


எல்லைக்கோடு-இனிய-கவிதை-உலா
எல்லைக்கோடு-இனிய-கவிதை-உலா

படத்தை சொடுக்கி காண்க
கம்பனவன் கவிநயத்தில் கடலலை ஓசையிலே
காண்பதுண்டோ எவரேனும் எல்லைக் கோடு!
செம்மொழியாம் தமிழமுதின் இனிமை யிலே
சேர்ந்துதான் தடுத்திடுமோ எல்லைக் கோடு !
மும்மாரி பொழிந்துதவும் வானமும் தான்
மொழிந்திடுமோ எல்லைக்கோடு இது வென்று
அம்மாவின் அரவணைப்பில் ஆழ்ந்தே இருக்க
அணைப்பிற்கு கிழிப்போமோ எல்லைக் கோடு

தேனிசையும் தென்பொதிகை சார லோடு
தெளித்துவரின் இடுவோமோ எல்லைக் கோடு
என்றென்றும் பனிச்சூழம்  மலைச் சரிவில்
இரவென்று பகலென்றும்  காவல் காத்தே
இன்னல்கள் எதுவரினும் இருளின் போதே
எதிரிகள்  எல்லைமீறி  வந்தே விட்டால்
கண்களுக்கே எல்லைக்கோடு இடாது தானே
காவற்பணி செய்கின்றார் எல்லையில் தானே!

வரிவசூலின் உச்சத்தை எட்டி விட்டால்
வளமான திருநாடாய்  ஆகிடு மன்றோ !
வரிகளை செலுத்துவதிலே இனி யேனும்
வரையாதீர் தமக்குத்தான் எல்லைக் கோடே !
கரித்துண்டின் எல்லையின் உச்சம் தானே
கண்கவரும் வைரக்கற்கள் ஆனதென் போம்!
சிரிப்பதனின் உச்சத்திலே சென்ற பேருக்கு
சீக்கிரமாய் நோய்கள்தாம் அண்டுவ தில்லை!

நா-மணக்கும் நற்றமிழின் இசைக்கு தானே
நாமிடுவோமோ? அதற்கோர் எல்லைக் கோடு !
பூமணத்தை தவழ்ந்திட்டே பயணம் செய்யும்
பூந்தென்றல் பாதைக்கில்லை எல்லைக் கோடு
வானிற்கோர் எல்லையுண்டோ , யார்தான்
வகுத்திடுவார் வையகம் போற்றி பாடும்
வான்போற்றும் வண்டமிழ் திருக் குறளின்
வாகான புகழுக்குண்டோர் எல்லைக் கோடு!

நன்றி- தினமணி நாளிதழ் வலைத்தளம் கவிதைமணி பகுதியில் பதியப்பட்டு இத்தளத்தில் மீள்பதிவு 

6 கருத்துகள்:

 1. #சிரிப்பதனின் உச்சத்திலே சென்ற பேர்க்கு சீக்கிரமாய் நோய்கள்தாம் அண்டுவதில்லை#
  இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!
  எல்லைக்கோடு கவிதை தினமணியில் இடம்பெற்றது என்பதைக் குறிப்பிட்டு சொல்லி இருக்கலாமே ?வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்போது தாங்கள் கூறிய திருத்தங்கள் மேற்பட்டு விட்டது. கருத்திற்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. அருமை! தினமணியில் வெளியானதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...