சனி, 12 மார்ச், 2016

என்னையே காணவில்லை

என்னையே  காணவில்லை
பூஅவிழும் பொழுதினில்
புறப்பட்ட தென்றலை தூதுவிட்டேன்!
தென்றலும் திரும்பவில்லை
தேவதையும் தெரியவில்லை!

காவினில் வீசிடும்
காற்றையே தூதுவிட்டேன்
காற்றும் காணவில்லை
காதலியும் கண்ணில்படவில்லை!

வான்நிலாவின் ஒளியையே
வான்வழியே தூதுவிட்டேன்
ஒளியும் எனைச் சேரவில்லை
ஒண்டமிழாளும் ஒண்டவில்லை

வெண்புறாவை அன்பாய்வருடி
விண்ணிலும் தூதுவிட்டேன
வெண்புறாவும் மீளவில்லை
வேல்விழியாளும் வழியில் இல்லை

வண்ணதோட்டத்தின் வண்ணமயிலையே
வகையாக தூதுவிட்டேன
வண்ணமயிலும் வரவில்லை
எண்ணத்தில் இருப்பவளும் எதிரில் இல்லை

இத்தனை தூது அனுப்பியும்
ஏந்திழையாள் எனைக் கூடாததால்
என்னிதயத்தையே தூதுவிட்டேன
இதயமும் இணையவில்லை

ஏங்கிதவித்த வேளையிலே….
என்னெதிரே வந்துநின்றே…..
அத்தனை தூதுக்களுடேனே….
அத்தான்என்றே அழைத்தாள்!

மயங்கியே விழுந்துவிட்டேன்
மடியில்கிடத்தி முத்தமிட்டாள்
முத்தமிட்ட பொழுதினில்
என்னையே காணவில்லை!




2 கருத்துகள்:

  1. மிக அழகு பெண்ணுக்கு நீங்கள் வர்ணனனையாக பயன்படுத்திய இத்தனை vaarthaigalum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...